
கவுகாத்தி,
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் அசாமின் எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. அமினுல் இஸ்லாம், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து பேசி உள்ளார்.
அதுகுறித்து அந்த கட்சி தலைவர் பத்ருதீன் அஜ்மல் கூறும்போது, "எம்.எல்.ஏ.வின் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை. இது அரசுடன் நிற்க வேண்டிய நேரம். பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை. அந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் மதத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார்கள்" என்று கூறி உள்ளார்.
இதையடுத்து அமினுல் இஸ்லாம் எம்.எல்.ஏ.வை தேசத் துரோக குற்றச்சாட்டில் போலீசார் நேற்று கைது செய்தனர். 'நாங்கள் அவர் பேசும் வீடியோவை பார்த்தோம். தாக்குதலில் பாகிஸ்தான் உடந்தையை மறைத்து பாதுகாக்கும் வகையில் பேசியிருந்தார். நானே அதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசாரை கேட்டுக் கொண்டேன். அவர் கைது செய்யப்பட்டதாக டி.ஜி.பி. என்னிடம் கூறினார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யார் பேசினாலும் எனது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்" என்று மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.