எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு: இந்தியா பதிலடி

1 week ago 4

ஸ்ரீநகர்,

இந்தியாவின் தலைப் பகுதியாக இருக்கும் காஷ்மீர், சிறந்த சுற்றுலா தலமாக உலக மக்களால் பார்க்கப்படுகிறது. அதேநேரம் காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்து வருவதால், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பயங்கரத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.

மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மத்திய மந்திரிசபை கூட்டம், அனைத்துக்கட்சி கூட்டம் என அடுத்தடுத்து பல்வேறு ஆலோசனைகள் மூலம் அடுத்தகட்ட நகர்வுகளை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான் பரப்பு மூடல், வாகா எல்லை மூடல் என்ற அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் உஷார் நிலையில், வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்த்தின் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. சிறிய அளவில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்வு நடைபெற்று இருப்பதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த துப்பாக்கி சூடில் இந்திய வீரர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article