
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது வாலிபர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி பயின்றுவரும் அந்த மாணவர் படிக்கும்போதே தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க எண்ணியுள்ளார். இதற்காக ஆன்லைனில் தொழில், வருமான வாய்ப்புகள் உள்ளதான என பார்த்துள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் விளம்பரம் வந்துள்ளது. அதில், பணத்தை முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய மாணவர் ஆன்லைன் செயலி மூலம் பணத்தை சிறுதி சிறிதாக ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார்.
இதையடுத்து, முதலீடு செய்த ஆன்லைன் நிறுவனத்திடம் பணத்தை திரும்பி தரும்படி மாணவன் கேட்டுள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களை கூறி முதலீட்டு தொகையை அந்நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவன் கடந்த 2 நாட்களாக கல்லூரி விடுதி அறையிலேயே இருந்துள்ளார்.
பின்னர், நண்பர்களிடன் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்பதாலும் தான் ஏமாற்றப்பட்டதாலும் விரக்தி அடைந்த அந்த மாணவன் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட விடுதியில் இருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு ஊட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மேல் சிகிச்சைக்காக மாணவன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.