*தடுப்பூசி போட்டதால் இறந்ததாக பெற்றோர் புகார்
சத்தியமங்கலம் : பவானிசாகர் அருகே தடுப்பூசி போட்டதால் சிறிது நேரத்தில் பெண் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள இக்கரைதத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கெளதம் (27). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி அசின் (19). இருவருக்கும் திருமணம் ஆகி ஓராண்டு ஆன நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் இத்தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையே நேற்று இக்கரைதத்தப்பள்ளி அருகே வெள்ளியம்பாளையம் புதூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் புஞ்சை புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கௌதம் அசின் தம்பதியரின் பெண் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மருத்துவத்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலை 11 மணியளவில் அசின் தனது குழந்தையை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த கிராம சுகாதார செவிலியர் கோமதி குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். இதையடுத்து அசின் தனது குழந்தையை மீண்டும் இக்கரைதத்தப்பள்ளியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதற்கிடையே சிறிது நேரத்தில் குழந்தை அழுது கொண்டிருந்ததாகவும், மூச்சு பேச்சின்றி மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அசின் தனது குழந்தையை மீண்டும் முகாமிற்கு அழைத்துச் சென்ற நிலையில் செவிலியர் கோமதி குழந்தையையும், தாயையும் உடனடியாக வாகனத்தில் ஏற்றி சத்தியமங்கலத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது உடனடியாக பரிசோதித்த மருத்துவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தையை பரிசோதித்ததில் குழந்தை இறந்தது தெரியவந்தது.
இதற்கிடையே தடுப்பூசி செலுத்தியதால் தனது குழந்தை இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கௌதம் மற்றும் அசின் இருவரும் பவானிசாகர் போலீசில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, பவானிசாகர் போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சத்தியமங்கலம் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடுப்பூசி மருந்தில் குறைபாடு ஏதும் இருக்க வாய்ப்பில்லை
புஞ்சை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அலுவலர் சசிகலா கூறியதாவது: நேற்று வெள்ளியம்பாளையம் புதூர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 6 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 குழந்தைகள் நல்ல நிலையில் உள்ளனர். அந்த குழந்தைகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனால் செலுத்தப்பட்ட தடுப்பூசி மருந்தில் குறைபாடு ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்பு இறப்பிற்கான காரணம் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பவானிசாகர் அருகே இரண்டரை மாத பெண் குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.