
சென்னை,
நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியுமானவர் பவன் கல்யாண். இவரது இளைய மகன் மார்க் சங்கர் (வயது 10). சிறுவன் மார்க் சங்கர் சிங்கப்பூரின் ரிவர் வேலி பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்தான். கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பள்ளியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், பள்ளி மாணவி உயிரிழந்தார். மேலும், பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, படுகாயமடைந்த மார்க் சங்கர் உள்பட அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து அறிந்த பவன் கல்யாண் நேற்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், மார்க்கின் உடல்நிலை குறித்து நடிகர் சிரஞ்சீவி அப்டேட் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் மார்க் சங்கர் வீடு திரும்பிவிட்டார். ஆனால் இன்னும் அவர் குணமடைய வேண்டும். ஆஞ்சநேயரின் அருளாலும் கருணையாலும், அவர் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் இயல்பு நிலைக்குத் திரும்புவார்' என்று தெரிவித்திருக்கிறார்.