
சென்னை,
அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் 5-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் கடந்த 7-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழகங்களின் 214 புதிய பஸ்கள் இயக்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த புதிய பஸ்களில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 27 புதிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தல்படி, 23 புதிய அதிநவீன குளிர்சாதன பஸ்கள் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இவற்றில் திருச்சி - திருப்பதிக்கு 2, சென்னை கிளாம்பாக்கம் - பெங்களூருவுக்கு 4, கோயம்பேடு - பெங்களூரு 2, சென்னை கிளாம்பாக்கம் - திருச்செந்தூர், திருவான்மியூர் - திருச்செந்தூர், மன்னார்குடி - சென்னை, காரைக்குடி - சென்னை, ஈரோடு - சென்னை, மதுரை - சென்னை, நெல்லை - சென்னைக்கு தலா 2 பஸ்கள், திருச்சி - சென்னைக்கு ஒரு பஸ் என வழித்தடம் ஒதுக்கப்பட்டு உள்ளன" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.