பழநியில் தைப்பூச விழா கோலாகலம் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்: இன்று திருக்கல்யாணம் ;நாளை தேரோட்டம்

3 months ago 7

பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, முருகனின் அருள் பெற லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியை நோக்கி திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வெள்ளத்தில் இன்று திருக்கல்யாண நிகழ்ச்சியும், நாளை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவிற்கு காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். இத்திருவிழாவிற்கு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் துவங்கி விட்டனர்.

இந்நிலையில், 10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத்திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (பிப். 10) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடக்க உள்ளது. இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை (பிப். 11) மாலை 4.45 மணிக்கு ரதவீதியில் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து 14ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். அன்றிரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது.

தைப்பூசத் திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பழநி நகரை நோக்கி வந்து கொண்டுள்ளனர். இதனால் பழநி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தாராபுரம் மற்றும் உடுமலை சாலைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிக்கின்றனர். அதிக கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுமார் 4 மணிநேரம் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முதல் 13ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

தைப்பூச விழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பழநிக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். தற்போது வரும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

The post பழநியில் தைப்பூச விழா கோலாகலம் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்: இன்று திருக்கல்யாணம் ;நாளை தேரோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article