ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் அந்தோணி ஜெரால்டு. இவர் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சுண்டப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வழக்கம்போல் வகுப்பறையில் அந்தோணி ஜெரால்டு பாடம் நடத்தி கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த மற்ற ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அந்தோணி ஜெரால்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோதே ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.