
புதுடெல்லி,
இந்தியாவை நோக்கி நேற்று 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன்களை இந்திய ராணுவம் நடுவானில் அழித்து வந்தது. முக்கியமான வான்பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தியது.
இந்தநிலையில் நள்ளிரவில் இந்தியாவும் திருப்பி அடிக்கத்தொடங்கியது. பாகிஸ்தான் நாட்டின் உணவு மற்றும் வேளாண் உற்பத்தியில் முக்கியமாக திகழும் கரியான் மற்றும் ஜலால்பூர் ஜெட்டா நகரில் இந்திய டிரோன்கள் தாக்குதலை தொடங்கின. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இந்தியா டிரோன் தாக்குதலை நடத்தியது.
மேலும் பீரங்கி தாக்குதலையும் அதிகரித்தது. அதேநேரம் பாகிஸ்தான், காஷ்மீரின் ஸ்ரீநகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்த டிரோனை இந்தியா அழித்தது. இதையடுத்து ஸ்ரீநகர் முழுவதும் இருளில் மூழ்கியது.
முன்னதாக நேற்று முன்தினம் காஷ்மீரில் மோரா அருகே வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தங்கள் காரில் வெளியேறினர். அப்போது பாகிஸ்தான் படையினரின் பீரங்கி குண்டு ஒன்று அந்த காரை தாக்கியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் நர்கீஸ் பேகம் என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.