பலத்த இடி மின்னலுடன் சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை

1 month ago 8

சென்னை: பலத்த இடி மின்னலுடன் சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் மழை பயத்தால் இரவு முழுவதும் மக்கள் விழித்திருந்தனர். அதிகாலை முதல் மீண்டும் மழை நீடித்ததால் அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். அதே நேரத்தில் பஸ், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும்.

அதேபோல், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. மேலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

அதன்படி சென்னையில் நேற்று இரவு 11 மணியளவில் பல்வேறு இடங்களில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது. பயங்கர இரைச்சலுடன் வேறு மழை நீ்டித்தது. குறிப்பாக சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், ஓட்டேரி, பெரம்பூர், திருவிக நகர், கொளத்தூர், வண்ணாரப்பேட்ைட, புளியந்தோப்பு, மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், பெசன்ட்நகர், ராஜா அண்ணாமலைபுரம் போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மழை வெளுத்து வாங்கியதால் சென்னைவாசிகள் தூக்கம் போனது என்று தான் சொல்ல வேண்டும். என்ன ஆக போகிறதோ? என்று நினைத்து சென்னைவாசிகள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்து கொண்டிருந்தனர். ஜன்னல் வழியாக மழை பெய்வதை பார்த்து கொண்டிருந்தனர். தொடர்ந்து அதிகாலையில் சற்று மழை விட்டது. அப்போது தான் சென்னைவாசிகளுக்கு நிம்மதி பிறந்தது என்று சொல்ல ேவண்டும். மழை விட்டதை பார்த்து பெருமூச்சு விட்டனர். சற்று இடைவெளியில் மீண்டும் காலை 6 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால், தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகினர். மோட்டார் சைக்களில் அலுவலகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியிருந்தது.

இதனால், கார் போன்ற வாகனங்கள் வைத்திருப்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். அவர்களும் தங்களுடைய வாகனத்தை விடுத்து பஸ், ரயிலில் பயணத்தை தொடர்ந்தனர். இதனால், இன்று காலை பஸ், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் பஸ்கள் மெதுவாக தான் இயக்கப்பட்டது. இதனால், குறிப்பிட்ட பகுதிகளை கடக்கவே வழக்கத்தை விட நேரம் அதிகமானது. தொடர் மழையால் தனியார் அலுவலகங்களில் வேலை பார்ப்போர் சிலர் விடுப்பு எடுத்தனர். பெரும்பாலான அலுவலகங்களில் வீடுகளில் இருந்து பணியாற்றவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், அலுவலகம் செல்வோர் வீடுகளில் இருந்தும் தங்களுடைய பணியை ெதாடங்கினர்.

காய்கறி, பால் வாங்க கூட்டம்: சென்னையில் நேற்று இரவு பெய்த மழை, இன்று காலையும் பெய்வதால் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்க மளிகை கடை, காய்கறி கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் நேற்று இரவும், இன்று காலையும் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. அங்கு மக்கள் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைக்க தொடங்கினர். மேலும் பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

The post பலத்த இடி மின்னலுடன் சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை appeared first on Dinakaran.

Read Entire Article