*பாரம்பரிய உணவு திருவிழாவில் கலெக்டர் வேண்டுகோள்
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி ஒருங்கிணைந்த அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது.
இதனை துவக்கி வைத்து கலெக்டர் சாருஸ்ரீ பேசியதாவது, சிறுதானிய பயிர்களான கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, திணை, குதிரைவாலி, வரகு, அரிசி, பனிவரகு போன்றவையே நம் மூதாதையரின் உணவு முறைகளில் முன்னுரிமை பெற்றிருந்தன.
இவற்றில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவை அதிகளவில் இருப்பதால் உடல் நலத்துக்கு ஏற்ற உணவாக இருந்தன. மேலும், சிறுதானியங்களில் பல மருத்துவகுணம் கொண்ட நோய் எதிர்ப்பு வேதிப்பொருள்களும் இருப்பதால், குறிப்பாக அவற்றிலுள்ள கிளை சிமிக் இன்டெக்ஸ் எனும் வேதிப்பொருள் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த மருந்தாக செயல்பட்டது.
மேலும், சிறுதானியங்களில் உள்ள மாவுச்சத்து ஜீரணமாகும் கால அளவு அதிகம் என்பதால் சிறுதானிய உணவு சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகும். இது தவிர, மாதவிடாய் பிரச்சனை, இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றைச் சீராக்குவதிலும், சிறுதானிய உணவுக்கு முக்கியப் பங்கு உண்டு.
மேலும், குழந்தைகளைத் தாக்கும் ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் வராமலும் சிறுதானிய உணவுகள் தடுக்கின்றன. சுமார் 30, 40 வருடங்களுக்கு முன்னர் வரை பெரும்பாலான மக்களின் பிரதான உணவாக இருந்த சிறுதானியங்கள் காலமாற்றத்தால் மக்களின் பிரதான உணவுப் பட்டியலில் இருந்து படிப்படியாக மறைந்தன. இதனால் நமது ஒரு தலைமுறை மனித சமுதாயம் ஆரோக்கியத்தை இழந்தது.
தற்போது வீடுகளில் தொடங்கி, உணவகங்கள் வரை சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள அடிதட்டு மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு நிலையான ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் உள்ளுரில் கிடைக்கும் சிறுதானியங்கள், கீரைவகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு சரிவிகித உணவை பெறுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து வட்டாரங்களுக்குட்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் வசித்து வரும் பொது மக்கள் அனைவரும் சிறுதானிய உணவு வகைகளை தினந்தோறும் பயன்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் பொன்னம்பலம், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) புவனேஸ்வரி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொ) அபிநயா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post பல மருத்துவகுணம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது தினமும் சிறுதானிய உணவுகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.