பல தலைமுறையினரிடம் கனவுகளை ஊக்குவிக்கும் தருணமாக இது அமைந்தது - முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 week ago 3

சென்னை,

தமிழகத்தில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய முன்னாள் வீரர்களை கொண்ட ஆல்-ஸ்டார் இந்திய அணியுடன், 2002-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணி காட்சி போட்டியில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டி நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரு அணி வீரர்களுடன் கைகுலுக்கி ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னாள் கால்பந்து ஹீரோக்களை காண 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததால் நேரு ஸ்டேடியமே குலுங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரேசில் ஜாம்பவான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆல்-ஸ்டார் இந்தியாவை தோற்கடித்தது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

இது குறித்து முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "பிரேசில் லெஜண்ட்ஸ் அணியும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியும் மோதிய கால்பந்து போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றதைக் காண மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு பெருமிதத்தோடு நேற்று இரவு ஆர்ப்பரித்துள்ளது.

ஒரு விளையாட்டுப் போட்டி என்பதைத் தாண்டி, நினைவில் கொள்ளத்தக்க, அடுத்து பல தலைமுறையினரிடம் கனவுகளை ஊக்குவிக்கும் தருணமாக இப்போட்டி அமைந்திருந்தது.

பிள்ளைகளே, நன்கு படியுங்கள், தைரியமாக விளையாடுங்கள், நியாயமான முறையில் வெல்லுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article