
திருச்செந்தூர்,
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் பணம், நகை, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவில் வசந்த மண்டபத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது.
இதில் ரூ.3 கோடியே 22 லட்சத்து 12,735-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 1.37 கிலோ தங்கம், 51 கிலோ 100 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் 980-ம் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.