சென்னை: கடந்த 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை மொத்தமாக திறந்துவிட்டு 289 பேர் பலியாக காரணமானவர்கள், தற்போது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதா என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் முதல்வர் என்று எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி அறிக்கை விட்டுள்ளார். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் அதற்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கடந்த 30-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற செய்தி வெளியானது. அதை படிக்காமல் அறிக்கை விட்டுள்ளார். அப்போது முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.