திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பருத்திப்பட்டு-திருவேற்காடு, கூவம் ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தை, இன்று (10.02.2025) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுக்கா, திருவேற்காடு பகுதி மக்கள், பூந்தமல்லி, ஆவடி மற்றும் சென்னைப் பகுதிகளுக்குச் செல்ல கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தைப் பயன்படுத்தி வந்தனர். பருவமழை காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் தரைப்பாலம் மூழ்கி, மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஆகையால் இப்பகுதி மக்கள் கூவம் ஆற்றினைக் கடக்க வெகுதூரம் செல்ல நேரிட்டது.
இதனை கருத்தில் கொண்டு, தரைப்பாலத்திற்குப் பதிலாக, புதிய உயர்மட்ட பாலம் ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, 94 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலத்தில், இருவழி பாதையுடன், இருபக்கமும் மிதிவண்டி பாதை (Cycle track) 2.00 மீட்டர் மற்றும் பாதசாரிகள் நடைபாதையுடன் (Footpath with Hand rails) 1.50 மீட்டர் என்று இப்பாலம் புதிய வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.
புதியதாக கட்டப்பட்ட இப்பாலத்தினால், பருத்திப்பட்டு, திருவேற்காடு, வீரராகவபுரம், ஆவடி, பூந்தமல்லி, காடுவெட்டி, கோவர்தனகிரி, சென்னீர்குப்பம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எளிதாக கூவம் ஆற்றைக் கடக்க பெரிதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. இப்பாலத்தினை இன்று (10.02.2025) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலன் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் முன்னிலையில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்கள்.
இத்திறப்பு விழாவிற்கு மதிப்புமிகு திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ச.சசிகாந்த் செந்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, அரசு செயலாளர், டாக்டர்.ஆர்.செல்வராஜ் I.A.S., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் I.A.S., நெடுஞ்சாலைத்துறை பெருநகர அலகின் தலைமைப் பொறியாளர் எஸ்.ஜவஹர் முத்துராஜ் மற்றும், பெருநகர அலகின் கண்காணிப்புப் பொறியாளர், கோட்டப் பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
The post பருத்திப்பட்டு-திருவேற்காடு, கூவம் ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.