சென்னை,
ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பராரி' . 'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வழங்குகிறார். இப்படத்திற்கு ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தை காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடிகர் ஹரி சங்கர் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் பெரும்பாலானோர் புதிய முக நடிகர்களாக அறிமுகமாகவுள்ளனர். உமா தேவி பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை சாம் மேற்கொண்டுள்ளார்.
மொழி, ஜாதி, கலப்பு திருமணம் ஆகியவற்றை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பராரி திரைப்படத்தை பார்த்த வி.சி.க தலைவரான திருமாவளவன் படத்தை பாராட்டியுள்ளார்.
அதில் "இன வெறியையும் ஜாதி வெறியையும் தூண்டும் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். உழைக்கிற மக்கள் இயல்பாகவே வாழவேண்டும். இதை மிகவும் பொறுப்புணர்வோடு இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். எழில் பெரியவேடி எடுத்த இந்த முயற்சிக்கு பாராட்டுகள். இத்திரைப்படத்தை அனைவரும் வந்து பார்க்க வேண்டும். இது மாதிரியான படங்களை வெகு ஜனங்களுக்கு சென்று சேர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.