பராமரிப்பற்ற வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் இடியும் அபாயம்

3 days ago 4

திருவாடானை, மே 15: திருவாடானை அருகே பாரதிநகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குடியிருந்து வந்தனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டிடம் முறையாக பராமரிக்கப்பட வில்லை.

இதனால் கட்டிடங்களை சுற்றி முட்புதர்கள் வளர்ந்தன. கட்டிடமும் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்ததால் அரசு அலுவலர்கள் காலி செய்து சென்று விட்டனர். இதனால், மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள் பயன்பாடின்றி மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், திருவாடானை பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து பணி மாறுதலாகி இந்த அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களின் நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பதற்காகவும், பணிச்சுமையை குறைப்பதற்காகவும் குறைந்த வாடகையில் இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் குடியிருந்து வந்தனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை சுற்றி முட்புதர்கள் மண்டியதாலும், இதனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களும் மிகவும் சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளதாலும் இந்த வீடுகளில் குடியிருக்க முடியாத சூழல் நிலவியது. இதனால் இப்பகுதியில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரமுள்ள நகர்ப்புறங்களில் குடியிருந்து வருகின்றனர். தினசரி அலுவலகம் சென்று வீடு திரும்பும் பயண நேரம் அதிகரிப்பதாலும், அவர்களின் பணிச்சுமை கூடுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இந்த சேதமடைந்த வீட்டு வசதி வாரிய மூன்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு புதிய குடியிருப்பு கட்டிடங்களை கட்ட வேண்டும் என்றனர்.

The post பராமரிப்பற்ற வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் இடியும் அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article