பரமக்குடி, ஜன.30: பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம், நீதிமன்ற தீர்ப்பின்படி யுஜிசி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றக் கூடிய கவுரவ விரிவுரையாளர்கள், தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியில் கல்லூரி கௌரவ விரிவாளர்கள் சார்பாக பணி நிரந்தரம், நீதிமன்ற தீர்ப்பின்படி யுஜிசி ஊதியம் ரூபாய் ஐம்பதாயிரம், கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம், கவன ஈர்ப்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,பணி நிரந்தரம் வழங்க வேண்டும், யுஜிசி நிர்ணயம் செய்த ஊதியம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், பெண் கவுரவ விரிவுரையாளருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து மூன்றாம் நாளாக நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post பரமக்குடி அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம் appeared first on Dinakaran.