பரந்தூர் விவகாரத்தில் திடீர் திருப்பம்: 5 கிராம மக்கள் நிலம் வழங்க சம்மதம்

4 hours ago 1

சென்னை,

சென்னை சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின், எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் அதிகரித்து வருகின்றன. இதேபோன்று சரக்கு விமானங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம், அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன.

இறுதியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசு அறிவித்தன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு திட்ட செலவு 29,150 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு அரசின் 'டிட்கோ' (தொழில் வளர்ச்சி நிறுவனம்) நிறுவனம் மூலமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

பரந்தூர் விமான நிலையம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. சுமார் 3,700 ஏக்கர் நீளம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே , கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீடு தொகை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஏக்கருக்கு 35 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 2.57 கோடி ரூபாய் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை சமாளிக்கும் வகையில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு, பத்திரப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.5 கிராமங்களை சேர்ந்த 19 நில உரிமையாளர்கள் நிலம் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

17.52 ஏக்கர் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 9.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலம் பதிவு செய்யப்பட்ட நான்கு மணி நேரத்தில், பணம் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Read Entire Article