
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏகனாபுரத்தை மையப்படுத்தி நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் 1,000-வது நாளை எட்டியுள்ளது.
இந்த நிலையில் பரந்தூர் மக்களின் போராட்டம் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், "மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப்போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!" என்று தெரிவித்துள்ளார்.