
புனே,
மராட்டிய தொடக்கப்பள்ளிகளில் 3-வது மொழியாக இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அரசு உத்தரவுக்கு உத்தவ் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதற்கு மராட்டிய அரசின் மொழி ஆலோசனை குழு தலைவர் லட்சுமிகாந்த் தேஷ்முக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக புனேயில் செய்தியாளர்களிடம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
இந்தியை திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சொல்வது தவறு. மராட்டியத்தில் மராத்தி மொழியே கட்டாயமாக இருக்கும். மராத்திக்கு பதிலாக இந்தி கட்டாயம் ஆக்கப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்வி கொள்கை 3 மொழிகளைக் கற்க வாய்ப்பளித்துள்ளது. 3 மொழிகளில் 2 இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று விதி கூறுகிறது.
மராத்தி ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ், மலையாளம் அல்லது குஜராத்தி தவிர வேறு எந்த மொழியையும் நீங்கள் எடுக்க முடியாது. தற்போது இந்தி மொழிக்கு ஆசிரியர்கள் உள்ளனர். பிற மொழிகளுக்கு ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. ஒரு விஷயம் மட்டும் ஆச்சரியம் அளிக்கிறது. இந்தி போன்ற இந்திய மொழிகளை நாம் எதிர்க்கிறோம், ஆனால் நாம் ஆங்கிலத்தை பாராட்டுகிறோம். ஆங்கிலம் தங்களுக்கு நெருக்கமாக இருப்பதாகவும், இந்திய மொழிகள் தொலைவில் இருப்பதாகவும் பலர் ஏன் நினைக்கிறார்கள்?. இதைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.