போப் மறைவு - இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

9 hours ago 1

புதுடெல்லி,

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 12 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்த அவருக்கு முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. பின்னர் சுவாசக்கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் நிமோனியா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதற்காக தீவிர சிகிச்சை பெற்ற அவர் 38 நாட்களுக்குப்பின் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.பின்னர் தனது பெரும்பாலான பணிகளை குறைத்துக்கொண்டு ஓய்வில் இருந்தார். வாடிகனில் சமீபத்தில் நடந்த புனித வியாழன், புனித வெள்ளி மற்றும் உயிர்ப்பு பெருவிழா பிரார்த்தனைகளிலும் பங்கேற்றார். குறிப்பாக ஈஸ்டர் பிரார்த்தனையில் பங்கேற்ற மக்களுக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தார்.

அவருக்கு நேற்று காலையில் திடீரென உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.அவரது மரணத்தை வாடிகன் உறுதி செய்தது. போப் பிரான்சிசின் மரணத்தை கர்தினால் (கார்டினல்) கெவின் பாரெல் அறிவித்தார்.

இதற்கிடையே போப் ஆண்டவர் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக சர்வதேச நாடுகளின் ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், சமூக தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து தேவாலயங்களிலும் கோவில் மணி ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து அவருடைய உருவப்படத்திற்கு பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி கத்தோலிக்க திருச்சபையில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நாட்கள் கொண்டாட்டம் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் தேவாலயங்களில் நடைபெறாது. நாள்தோறும் நடைபெறும் திருப்பலி உள்ளிட்ட மற்ற நிகழ்வுகள் வழக்கம்போல நடைபெறும் என சாந்தோம் தேவாலய பாதிரியார்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று கூறியுள்ளது.

Read Entire Article