
போபால்,
மத்திய பிரதேசத்தின் ஷாஹ்தோல் மாவட்டத்தில் திருமண நிகழ்வின் போது 24 பேரை ஏற்றிக்கொண்டு கரோண்டியா-கடா சாலையில் நேற்று மாலை மினி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது மினி லாரி எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 20 பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக ரேவா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்