சென்னை,
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நாளை (20ம் தேதி) தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் சந்திக்க, நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. காவல்துறை அனுமதி அளித்த ஓர் இடத்தில் மட்டும் தான் பொதுமக்களை விஜய் சந்திக்க வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட வாகனங்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தான் வர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியை திருமண மண்டபத்தில்தான் நடத்த வேண்டும் என போலீசார் தரப்பில் கூறுவதாகவும், ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தினர் அம்பேத்கர் திடலில் நடத்த அனுமதி கேட்டதால் இழுபறி நீடித்தது. இது தொடர்பாக இரவு வரை பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், தனியார் மண்டபத்தில் மட்டுமே மக்களை சந்திக்க விஜய்க்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். நாளை பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை மட்டுமே சந்திக்க காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.