பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: சஞ்சய் ராய் குற்றவாளி

3 hours ago 2

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.கே. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் 3வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் (வயது 31) அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் பயிற்சி பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையை தொடங்கிய சிபிஐ பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டது. சாட்சியங்களை அழிக்க முயன்றதாக ஆர்.கே.கர் மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்தது. ஆனால், அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

இதனிடையே, இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சீல்டா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அனைத்து வாதங்களும் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அதன்பின்னர், தீர்ப்பிற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சீல்டா மாவட்ட கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.

குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் நாளை மறுதினம் (20ம் தேதி) அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.  

Read Entire Article