சென்னை,
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த சூழலில் தமிழக வெற்றில் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாநில பொருளாளர் உள்ளிட்டோர் நேரடியாக மனு அளித்தனர். இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி வரும் 20-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய், போராட்ட குழுவினரை சந்திக்க உள்ளார்.
இந்த நிலையில், பரந்தூர் செல்லும் த.வெ.க தலைவர் விஜய்க்கு காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.பரந்தூர் மக்களை சந்திக்க 2 இடங்களை போலீசார் பரிந்துரைத்துள்ள நிலையில், ஒரு இடத்தை தேர்வு செய்ய விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
*அனுமதிக்கப்பட்ட வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே த.வெ.க-வினர் பரந்தூர் செல்ல வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பரந்தூரில் த.வெ.க தலைவர் விஜய் இருக்க கூடாது.
*பரந்தூர், ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட ஒன்பது கிராம மக்களை மட்டுமே சந்திக்க விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
*நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது