ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த சூழலில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோட்டா நகரில் தங்கியிருந்து ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த 17 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தை சேர்ந்த மனன் சர்மா என்ற மாணவர், கடந்த 3 ஆண்டுகளாக கோட்டா நகரில் தங்கியிருந்து, அங்குள்ள உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்நிலையில், ஜே.இ.இ. தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தனது அறையில் மனன் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. மாணவர் மனன் சர்மாவின் கண்களை தானம் செய்ய உள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். நடப்பு மாதத்தில் கோட்டா நகரில் நடந்துள்ள 4-வது தற்கொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.