'பயாஸ்கோப்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

6 months ago 17

'வெங்காயம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் நேற்று வெளியான படம் 'பயாஸ்கோப்'. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ளனர். முற்றிலும் கிராமத்து புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜும், சேரனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், 'பயாஸ்கோப்' எப்படி இருக்கிறது என்பது காண்போம்.

கிராமத்து மக்களின் பங்களிப்பில் உருவாகி 2011-ல் வெளியான 'வெங்காயம்' படம் சிறந்த கதையம்சத்துக்காக திரையுலகினரை கவர்ந்தது. வெங்காயம் படம் எப்படி உருவானது என்ற உண்மை சம்பவ பின்னணியே 'பயாஸ்கோப்' படத்தின் கதை. இது தமிழ் சினிமாவின் முதல் புது முயற்சி.

சங்ககிரி ராஜ்குமார் படிப்பை முடித்து விட்டு ஜோதிடத்தை நம்பி நடந்த தற்கொலை மற்றும் சக்தி பெற குழந்தையை நரபலி கொடுத்தல் போன்ற மூட நம்பிக்கைகளை படமாக எடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். படத்தில் தனது சொந்த கிராமத்தினரையே நடிக்க வைக்கிறார். உள்ளூர் ஜோதிடர் இடையூறுகள் செய்து படத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதையும் மீறி ராஜ்குமாரால் படத்தை முடிக்க முடிந்ததா? இதில் சத்யராஜ், சேரன் பங்களிப்பு என்ன என்பது மீதி கதை.

 நாயகனாக வரும் ராஜ்குமார் கதைக்கு தேவையான நடிப்பை சினிமாத்தனம் இல்லாமல் வழங்கி உள்ளார். படத்தை முடிக்க நிலத்தை அடமானம் வைப்பது, எடுத்த படத்தை வியாபாரம் செய்ய அலைவது. இறுதில் தனது படத்தின் தாக்கத்தால் நடந்த திருமணத்தை பார்த்து நெகிழ்ந்து கண்ணீர் வடிப்பது என்று அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிறைகிறார்.

குப்புசாமி, வெள்ளையம்மாள், முத்தாயி போன்ற சினிமா சாயம் இல்லாத மண்ணின் மைந்தர்களின் நடிப்பு நெகிழ வைக்கிறது. சத்யராஜ், சேரன் ஆகியோரின் முத்திரை நடிப்பு கூடுதல் பலம். முரளி கணேஷ் கேமரா கிராமத்தின் வாழ்வியலை கண்முன் நிறுத்துகிறது. தாஜ்நூர் கதைக்கு தேவையான அளவில் இசையமைத்து பலம் சேர்த்துள்ளார்.

வெகுஜன சினிமாவுக்குரிய அம்சங்கள் இல்லாதது பலவீனம். மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து தன்னை சமூக பொறுப்புள்ள இயக்குனராக வெளிப்படுத்தி உள்ளார் இயக்குனர் ராஜ்குமார்.

Read Entire Article