சிவகங்கை, மார்ச் 11: சிவகங்கை மாவட்டத்தில் நெல் அறுவடை முடிந்த தரிசு நிலத்தில் பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்ய 50 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை பணி துவங்கியுள்ளது. நெல் அறுவடை முடிந்த தரிசு நிலத்தில் பயறுவகை சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு, பயிர் செய்யும்போது வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. பயறுவகைப் பயிர்களை பயிர் செய்ய குறைவான நீரே போதுமானது.
மேலும், அடுத்த பயிர் சாகுபடிக்கு தேவையான தழைச்சத்து இயற்கையாகவே கிடைக்க வழிவகை செய்கிறது. குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்க ஏதுவாகிறது. 50சதவீத மானியத்தில் திரவ ரைசோபியம், திரவ பாஸ்போ பாக்டீரியா, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் விற்பனைக்காக அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சம்பா, கோடை என தொடர்ச்சியாக நெல் சாகுபடி செய்வதால் மண்வளம் பெரிதும் பாதிப்படைகிறது. மண்ணின் பிரதான பேரூட்டச் சத்தான தழைச்சத்தை நிலைநிறுத்த வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இதைத் தவிர்த்து மண்வளத்தைப் பாதுகாக்க கூடிய உளுந்து, தட்டைப்பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பயறு வகை சாகுபடிக்கு 50 சதவீத மானியத்தில் விதைகள் பெறலாம் appeared first on Dinakaran.