
கோவை,
கோவை மாவட்டம் போத்தனூரில் தண்டவாளத்தை புதுப்பிக்கும் பணி நடப்பதால் கோவை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை போத்தனூர் ரெயில்வே யார்டில் தண்டவாள புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதை எளிதாக்க சில ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.
அதன்படி கண்ணூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் கண்ணூர்-கோவை ரெயில் (எண்:16607) வருகிற 8, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பாலக்காடு ரெயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். இந்த ரெயில் கண்ணூரில் இருந்து பாலக்காடுக்கு மட்டுமே இயக்கப்படும். அந்த நாட்களில் பாலக்காடு சந்திப்பில் இருந்து கோவைக்கு இயக்கப்படாது.
மதுரையில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட மதுரை-கோவை ரெயில் (எண்:-16722) 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் போத்தனூரில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். இந்த ரெயில் மதுரையில் இருந்து போத்தனூர் வரை மட்டும் இயக்கப்படும்.
கோவை-மதுரை ரெயில்
மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம்-போத்தனூர் மெமு ரெயில் (எண்:-66615) 8, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு மட்டுமே இயக்கப்படும்.
கோவையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை-மதுரை ரெயில் (எண்:-16721) 8, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பொள்ளாச்சியில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு மதுரை வரை இயங்கும்.
போத்தனூர்- மேட்டுப்பாளையம்
கோவையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை -கண்ணூர் ரெயில் (எண்:-16608) 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மதியம் 2.03 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும். அந்த நாட்களில் போத்தனூரில் இருந்து புறப்பட்டு கண்ணூர் வரை இயங்கும்.
போத்தனூர்- மேட்டுப்பாளையம் மெமு ரெயில், போத்தனூரில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக 8, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.