
சென்னை,
யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக திரைத்துறையில் நுழைந்து தனது கடின உழைப்பினால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி ஸ்டார் நடிகராக உருவெடுத்தவர் அஜித். 'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனான அறிமுகமான அஜித், 'ஆசை', 'காதல் கோட்டை' படங்கள் மூலம் பிரபலமானார். இவரது பல படங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளது. துணிவு படத்தை தொடர்ந்து தற்போது 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் அஜித்குமார் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்.சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலியாக நண்பர்களுடன் மோட்டார் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் பயணம் குறித்து பேசியதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில்'ஒரு மதம் மக்களை வெறுக்க வைக்கும், ஆனால் அவர்களை சந்தித்த பிறகு அது மாறும் என்ற வரிகளை மேற்கோள்காட்டியுள்ள அஜித்குமார், இது போலதான், மதம் மற்றும் இனத்தை வைத்து நாம் ஒரு கணிப்பில் இருப்போம், அவர்களை சந்தித்த பிறகுதான் அவர்களின் உண்மை நிலை என்னவென்று தெரியும். ஒரு பயணம் அங்குள்ள மக்களை பற்றி அறிந்து கொள்வது மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும்' என்று தெரிவித்துள்ளார்.
வீடியோவை அஜித்தின் மேலாளர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது போன்ற பயணங்கள் ஒரு சாதாரண நபரை, சிறந்த மனிதராக மாற்றும் என்றும் அஜித்குமார் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அஜித் பேசும் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.