
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.
இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.
ஆனால் நேற்று இரவு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது. தொடர் தாக்குதல்களால் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ், "பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் 'ஆபரேஷன் சிந்தூர்' மேற்கொள்ளப்பட்டது. 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்று தெரிவித்தார்.