
காஞ்சிபுரம்,
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை ஆகிய இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே வேதபாராயணம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் மீண்டும் தொடங்கிய வடகலை - தென்கலை மோதல் ஏற்பட்டுள்ளது. 2-ம் நாளான இன்று வரதராஜ பெருமாள் அம்ச வாகனத்தில் எழுந்தருளி காஞ்சி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தார். அப்போது திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை - தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பிரபந்தம் பாடிக் கொண்டிருந்த எதிர் தரப்பினர் கூச்சல் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. வடகலை பிரிவினர் பெருமாள் முன்பு தாத்தாச்சாரியார்கள் மந்திர புஷ்பம் பாடுவதில் இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் தலையிட்டு இருதரப்பினர் இடையே சமாதானம் செய்து வைத்தனர். இந்த சம்பவம் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.