
புதுடெல்லி,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
"நமது நாட்டின் பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். 'ஆபரேஷன் சிந்தூர்' என்பது பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதம் கொடுத்த பதிலடி நடவடிக்கை ஆகும்.
இந்தியா மற்றும் அதன் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க மோடி அரசாங்கம் உறுதியேற்றுள்ளது. பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும் இந்தியா உறுதியாக உள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.