சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கழனிவாசல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அருண் (30) இவரது மனைவி பவித்ரா. அருண் சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி இந்த ஓட்டலுக்கு வந்த அனகாபுத்தூரைச் சேர்ந்த சங்கர்(55), அவரது மகன் அருண்குமார்(30) ஆகியோர் பார்சல் சாப்பாடு வாங்கி உள்ளனர். பின்னர் கூடுதலாக ஒரு சாம்பார் பாக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு அருண் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கரும் அவரது மகன் அருண்குமாரும் அருணை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அருன் இறந்துள்ளார்.இந்த கொலை சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரையும் அவரது மகன் அருண்குமாரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அருணின் மனைவி பவித்ரா, சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், நாங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட சங்கர், அவரது மகன் அருண்குமார் ஆகியோர் எனது கணவரின் சாதி குறித்து தெரிந்துகொண்டு அவரை சாதியை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்தனர். எனவே, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன், இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு சேர்க்காதது தெரியவருகிறது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி விளக்கம் அளிக்குமாறு கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, உதவி போலீஸ் கமிஷனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி வருகிற 17ம் தேதி ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கும் வகையில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
The post பம்மலில் ஓட்டல் சூபர்வைசர் அடித்து கொலை விவகாரம்; வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?.. தாம்பரம் போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.