பன்னாட்டு புத்தகக் காட்சியில் 64 நாடுகள் பங்கேற்பு; ரூ.3 கோடியில் 166 நூல்கள் மொழி பெயர்ப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

3 hours ago 2

சென்னை: 166 நூல்களை 32 மொழிகளில் மொழி பெயர்த்திட ₹3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடைபெறும் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:
சென்னையில் நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் 24 நாடுகள் பங்கேற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2ம் ஆண்டு 40 நாடுகள் பங்கேற்று 750 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நடப்பாண்டில் 64 நாடுகள் பங்கேற்றுள்ளது. 1000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் ₹3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மகாகவி பாரதியாரின் பொன்மொழியின் படி “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என்ற அடிப்படையில், இம் மாநாட்டின் மூலம் 166 நூல்கள் 32 மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள நூல்கள் உரிமைக்குழு, உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள், படைப்புலக ஆளுமைகள் மற்றும் வெளியீட்டாளர்களை இணைக்கும் ஒரு தனித்துவமான அமைப்பாக விளங்குகிறது. இலக்கிய முகவர் திட்டமும் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பொது நூலக இயக்கக இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் சங்கர், பொலோனியா குழந்தைகள் புத்தகக் கண்காட்சி இயக்குநர் இத்தாலி எலினா பசோலி, பொலோனியா புக் ப்ளஸ் மதிப்புறு இயக்குநர் இத்தாலி ஜாக் தாமஸ், திரௌபதி வெர்லாக் இயக்குநர் கிறிஸ்டியன் வைஸ், எல்லைகளற்ற வெளியீட்டாளர்கள் அமைப்பு நிறுவனர் சைமன் டி ஜோக்காஸ் (கனடா), ஏசியன் பதிப்பாளர்கள் சங்க தலைவர் மலேசியா ஷேக் பைசல் பின் ஷேக் மன்சூர், பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநர் சங்கர சரவணன், பொது நூலக இயக்கக இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார், பபாசி தலைவர் சொக்கலிங்கம் மற்றும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பன்னாட்டு புத்தகக் காட்சியில் 64 நாடுகள் பங்கேற்பு; ரூ.3 கோடியில் 166 நூல்கள் மொழி பெயர்ப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article