கூடலூர்,ஜன.11: கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து புதிதாக மைசூருக்கு காலை நேரத்தில் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து காலை 5 மணிக்கு கூடலூர் கிளையில் இருந்து புறப்பட்டு பந்தலூர் சென்று பின் 6 மணிக்கு பந்தலூரில் இருந்து புறப்பட்டு கூடலூர் வந்தடைந்து அதன் பின் அங்கிருந்து காலை 7.30 மணிக்கு மைசூர் நோக்கி செல்கிறது.
காலை நேரத்தில் பந்தலூரில் இருந்து கூடலூர் நோக்கி வரும் இந்த பேருந்தில் பயணிகள் அதிகம் ஏறுவதில்லை என்றும், மேலும் அந்த வழித்தடத்தில் காலை நேரத்தில் கொளப்பள்ளி, தாளூர்,சேரம்பாடி,பொன்னானி,அய்யன் கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் வருவதால் இந்த பேருந்துக்கு போதிய வருவாய் கிடைப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்தப் பேருந்தை கூடலூரில் இருந்து மைசூருக்கு இயக்கினால் பயணிகள் அதிகம் பயனடைவார்கள்.
மேலும் கூடலூரில் இருந்து மைசூர் செல்வதற்கு ஊட்டியில் இருந்து காலை 8 மணிக்கு வந்து சேரும் பேருந்து மட்டுமே முதல் பேருந்தாக உள்ளது. அதே நேரத்தில் கூடலூரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் காலை ஏழு முப்பது மணிக்குள் பல பேருந்துகளில் பயணிகள் வந்து சேர்கின்றனர்.இவர்களில் மைசூர்,குண்டல்பேட்டை,சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் இந்தப் பேருந்தில் பயணிக்க முடியும்.
மேலும் தமிழகத்தின் சமவெளி பகுதிகளான சத்தியமங்கலம்,கோபிசெட்டிபாளையம்,ஈரோடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளும் இந்த பேருந்தை பயன்படுத்தி அதிக சிரமம் இன்றி பயணிக்க முடியும் என்பதால் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த பேருந்தை கூடலூரில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயன்கள் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post பந்தலூர் – மைசூர் அரசு பேருந்தை கூடலூரில் இருந்து இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.