பந்தலூர், கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க இரும்பு வேலி அமைக்க வேண்டும்

2 weeks ago 4

*பொதுமக்கள் கோரிக்கை

பந்தலூர் : நீலகிரி மாவட்டம்,கூடலூர் வனக்கோட்டம், பந்தலூர், கூடலூர் சுற்றுவட்டாரம் பகுதிகளில் காட்டு யானைகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கோடை காலம் துங்கும் நிலையில் காடுகளில் வனவிலங்குகள் உண்ண உணவு இல்லாமல் குடியிருப்புகளை நோக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதம் செய்வது, குடியிருப்புகளை உடைத்து சேதம் ஏற்படுத்துவது, சாலைகளில் குறுக்கிட்டு வாகனங்களை வழிமறிப்பது. சில நேரங்களில் மனித-யானை மோதல்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாவதும் என தொடர்கதையாக இருந்து வருகிறது.

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுப்பதற்கு வனப்பகுதியை ஒட்டி கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி பகுதியில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரயில் தண்டவாளம் இரும்புகளை கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் தமிழக வனத்துறையினர் எடுப்பதாக இல்லை.ஆங்காங்கு வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் காட்டு யானைகள் குடியிருப்புகளுக்கு வராமல் தடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள அகழிகள் மண் மூடி முற்புதர்கள் சூழ்ந்து அகழிகள் காணாமல் உள்ளது.

அதனை முறையாக பராமரிப்பு செய்யாமல் இருந்து வருவதால் நாள்தோறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் குந்தலாடி பகுதியில் தேயிலைத்தோட்டத்தில் பசுந்தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளிகளை காட்டு யானை துரத்தி தாக்கியது. பந்தலூர் பஜார் பகுதிக்கு காட்டு யானைகள் புகுந்து மதில் சுவற்றின் இரும்பு கம்பிகளை உடைத்து சேதம் செய்தது.

இந்நிலையில் நேற்று பாட்டவயல் முக்கட்டி சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு யானை வாகனங்களை வழிமறித்தது. எனவே அரசு மற்றும் வனத்துறை காட்டு யானைகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வனப்பகுதிகளை ஒட்டி ரயில் தண்டவாளம் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர், கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க இரும்பு வேலி அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article