*மனைவி உயிர் தப்பினார்
பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழக எல்லைப்பகுதியான கேரளா மாநிலம், வயநாடு காப்பாடு நூல்புழா பகுதியில் நேற்று காலை ஒருவர் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு கேரளா முத்தங்கா வனவிலங்கு சரணாலய காப்பாளர் விமல் மற்றும் வனத்துறையினர் மற்றும் கேரளா போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது இறந்து கிடந்தது நீலகிரி மாவட்டம் பாட்டவயல் அருகே வெள்ளேரி வயல் ஆதிவாசி காலனியை சேர்ந்த மானு (45) என தெரியவந்தது. நேற்று முன்தினம் மானு மற்றும் அவரது மனைவி சந்திரிகா (40) ஆகியோர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் காப்பாடு நூல்புழா பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு செல்லுள்ளனர். அப்போது மானுவை யானை தாக்கி பலியானது வனத்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
மானுவின் உடலை எடுக்கவிடாமல் அப்பகுதியினர் வனத்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களை சமாதானம் செய்து யானை தாக்கி பலியானவர் உடலை மீட்டு சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மானுவுடன் சென்ற அவரது மனைவி சந்திரிகாவை வனத்துறையினர் மற்றும் போலீசார் வனப்பகுதியில் தேடினர். அப்போது, சந்திரிகா வனப்பகுதிக்குள் இருந்ததை கண்டு பிடித்தனர்.
அவரிடம் விசாரித்தபோது, ‘‘நாங்கள் 2 பேரும் நடந்து செல்லும்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை எனது கணவரை தாக்கியது. நான் யானையிடமிருந்து தப்பி வனப்பகுதியில் பதுங்கி உயிர் பிழைத்தேன்’’ என கூறினார்.
இதைத்தொடர்ந்து சந்திரிகாவை வனத்துறையினர் அழைத்து சென்றனர். இறந்த மானுவுக்கு 4 மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் வெள்ளேரி வயலில் படிக்கிறார். மற்ற 3 மகள்களும் கேரளாவில் உள்ள உறவினர்கள் வீட்டில் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post பந்தலூர் அருகே யானை தாக்கி ஆதிவாசி பலி appeared first on Dinakaran.