*பொதுமக்கள் பீதி
பந்தலூர் : பந்தலூர் அருகே கொளப்பள்ளி மாங்காமூலா பகுதியில் கட்டைக்கொம்பன், புல்லட் என வனத்துறையால் அழைக்கப்படும் 2 காட்டு யானைகள் அட்டகாசத்தால் பொது மக்கள் பீதியில் தவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் சேரம்பாடி காயிக்காடு, சேரம்பாடி டேன்டீ, சப்பந்தோடு, கோரஞ்சால் மற்றும் அய்யன்கொல்லி சுற்றுவட்டாரத்தில் தட்டாம்பாறை, முருக்கம்பாடி, கோட்டப்பாடி, மூலக்கடை, கொளப்பள்ளி மாங்கா மூலா, படச்சேரி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் கட்டைக்கொம்பன், புல்லட் என வனத்துறையால் அழைக்கப்படும் 2 யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் அடிக்கடி புகுந்து வருகின்றன.
தொடர்ந்து, வாகனங்கள், ரேஷன் கடைகள் மற்றும் விவசாய பயிர்களை யானைகள் சேதம் செய்து வருகின்றன. மேலும் பொதுமக்களை தாக்குவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. சப்பந்தோடு பகுதியில் ஒருவரை தாக்கி கொன்றதை தொடர்ந்து வனத்துறை சார்பில் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு 2 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் பலன் அளிக்காமல் போனது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொளப்பள்ளி மாங்கா மூலா குடியிருப்பு பகுதியில் புகுந்த 2 காட்டு யானைகள் அப்பகுதியில் வசித்து வரும் சந்திரபாலன் என்பவரது தோட்டத்தில் புகுந்தது. அங்கு பயிரிடப்பட்ட வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை உடைத்து தின்று சேதப்படுத்தியது. இதனை கண்ட தோட்டத்தில் குடியிருந்தவர்கள், பலத்த சத்தமிட்டு யானையை துரத்தியுள்ளனர்.
ஆனால் யானை அங்கிருந்து நகராமல் இருந்துள்ளது. அதன் பின்னர், அங்கிருந்து சென்று கண்ணில் பட்ட பொருட்கள் அனைத்தும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. பயிர்களை அழித்து, அச்சுறுத்தி வரும் காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பந்தலூர் அருகே தொடரும் பரபரப்பு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அச்சுறுத்தும் கட்டைக்கொம்பன், புல்லட் யானைகள் appeared first on Dinakaran.