பதவிப்போட்டி

2 weeks ago 2

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பதவியேற்றது முதற்கொண்டே பதவிப்போட்டி கட்சிக்குள் நடந்து வருகிறது. இதனால் அடிக்கடி காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்துவது, தங்கள் தலைவரை முன்னிலைப்படுத்துவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்றதை தொடர்ந்து சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியா, டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியா என்ற பரபரப்பு அரங்கேறியது.

பின்னர் மேலிடம் அழைத்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. சித்தராமையாவை முதல்வராக்கியது. துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி இரண்டையும் டி.கே.சிவகுமாருக்கு அளித்து சமாதானப்படுத்தியது. இந்நிலையில் சித்தராமையா இரண்டரை ஆண்டுக்கு பிறகு முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் இருப்பதாக கூறி பிரச்னை வெடித்தது. அது தணிவதற்குள் தலித் அமைச்சர்கள் ஏன் முதல்வராக கூடாது என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், கே.எச்.முனியப்பா, சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர் போர்க்கொடி தூக்கினர். மூத்த அமைச்சராக இருக்கும் எம்.பி.பாட்டீல், தேஷ்பாண்டே ஆகியோரும் முதல்வர் பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.

மீண்டும் கட்சி மேலிட தலைவர்கள் முதல்வர் பதவி மாற்றம் குறித்தோ, தலித் முதல்வர் என்று போர்க்கொடி உயர்த்துவதையோ தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இருந்தாலும் பதவி போட்டி கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் நீர் பூத்த நெருப்பாய் இருந்து வருகிறது. சமீபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மாநில தலைவர் பதவியை டி.கே.சிவகுமாரிடம் இருந்து பறித்து வேறு யாருக்காவது தர வேண்டும் என்று பேசினார். இதனால் கொதிப்படைந்த டி.கே.சிவகுமார், கட்சி தலைவர் பதவி கடையில் விற்கும் பொருளல்ல.

உழைப்புக்கு மேலிடம் கொடுக்கும் வெகுமதி என்று பதிலடி கொடுத்ததால் மீண்டும் பரபரப்பு தொற்றியது. இதையடுத்து காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே தலையிட்டு, கர்நாடக அமைச்சர்கள் அவரவர் வேலையை மட்டும் பார்த்தால் போதும். யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்று மேலிடம் முடிவு எடுக்கும் என்று வாய்ப்பூட்டு போட்டார். இதற்கிடையில் காங்கிரஸ் மாநாடு நூற்றாண்டு விழாவில் டி.கே.சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். இதை சகித்து கொள்ள முடியாத பெலகாவி காங்கிரஸ் நிர்வாகிகளும், சதீஷ் ஜார்கிஹோளி ஆதரவாளர்களும், அடுத்த முதல்வர் ஜார்கிஹோளி என்று பதாகை ஏந்தி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.

காங்கிரசுக்கு சற்றும் சளைத்தவர்கள் நாங்கள் இல்லை என்பது போல் மேலிட தலைவர்கள் முன்னிலையில் நடந்த பாஜ ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக அனைவரும் புகார் வாசித்தனர். ஒரு கட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயண், விஜயேந்திரா இருவரும் ஒருமையில் மோதிக்கொண்டனர். அவர்களை மேலிட தலைவர்கள் சமாதானம் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மேலும் மேலிட தலைவர்கள் முன்னாள் அமைச்சர் ராமுலு கட்சி பணியில் சரிவர ஈடுபடுவது இல்லை என்று கடிந்து கொண்டதால் அவர் கோபமாக வெளிநடப்பு செய்த சம்பவமும் கர்நாடக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்புக்கு வழி வகுத்து இருக்கிறது.

The post பதவிப்போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article