10, பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் தொடங்கின: சென்னையில் அமைச்சர் நேரில் ஆய்வு

2 hours ago 1

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. சென்னை சைதாப்பேட்டை மாதிரி பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்முறைத் தேர்வு மையத்தை பார்வையிட்டார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 20 லட்சம் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்க இருப்பதை அடுத்து, முன்னதாக மேற்கண்ட வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடிக்கப்படும். அதன்படி, செய்முறைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 3200 மையங்களில் தொடங்கியது.

சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி மேனிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் தொடர்ச்சியாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி பள்ளியில் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் நேரில் சென்று தேர்வு மையத்தை பார்வையிட்டார். செய்முறைத் தேர்வுகளை பொருத்தவரையில், பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் 2 கட்டங்களாக நடக்கிறது. சென்னையில் மொத்தம் 580 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 306 பள்ளிகளிலும், 2ம் கட்டமாக 274 பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* பாலியல் அத்துமீறல் ஆசிரியர்களின் சான்றுகள் ரத்து
ஆய்வுக்கு பிறகு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் சுமார் 38 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இருந்தாலும் அவற்றில் 2211 பள்ளிகள் நூற்றாண்டை நிறைவு செய்துள்ளன. முன்னாள் மாணவர்கள் எடுக்கின்ற சீரிய திருவிழாவை நாம் நடத்தி வருகிறோம். முதலில் திருக்குவளையில் இந்த விழா தொடங்கியது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம். கல்வி அறிவு அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற வகையில் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவியரிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்பட்டு கடும் தண்டனை பெற்று தரப்படும். அத்துடன் நில்லாமல் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளும் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

The post 10, பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் தொடங்கின: சென்னையில் அமைச்சர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article