‘‘மன்னர் மாவட்டத்தில் தாமரை கட்சியில் பதவிக்கு பணம் கொடுத்து பதவி கிடைக்காதவர்கள் கொடுத்த பணத்தை கேட்டு தராததால் தகராறு செய்வதாக தகவல் வருகிறதே.. உண்மைதானா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘உண்மையே தான்.. இந்த மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்களுக்கு முன்பு தாமரை கட்சி மாவட்ட தலைவர்கள் தேர்வு நடைபெற்றது. அப்போது பலர் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தினர். முருகன் பெயர் கொண்டவர் புரட்சியானவரை நாடியுள்ளார். அப்போது புரட்சியானவர் இது என்ன பெரிய விஷயமா விடுங்க பாத்துக்கலாம் என்று சொல்லியுள்ளார். ஆனால் கொஞ்சம் சுவீட் பாக்ஸ் வேனும் என்று சொல்லியுள்ளார். முருகன் பெயர் கொண்டவர் கேட்ட சுவீட் பாக்ஸை கொடுத்துள்ளார். ஆனால் மாவட்ட தலைவர் பதவி வேறு ஒருவருக்கு சென்றுவிட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகனிடம் கொடுத்த சுவீட்டை கேட்டபோது வாக்குவாதம் ஆகியுள்ளது. இதுகுறித்து புரட்சியானவர் மீது, முருகன் பெயர் கொண்டவர் கமலாலயம் சென்று பஞ்சாயத்து கூட்டியுள்ளாராம். இதனால் புரட்சியானவர் தரப்பு என்ன செய்வது என்று கையை பிசைந்து வருகிறார்களாம்..” என்றார் விக்கியானந்தா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்துகளுக்கு டிரைவர் மற்றும் கண்டக்டர் பணி ஒதுக்க பல ஆயிரங்கள் கொடுத்தால் மட்டுமே கதை நடக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆமா..காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையுள்ள பணிகள் இலகுவானதாகவும், அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை உள்ளவை கடினமானதாகவும் கணக்கிட்டு வைத்துள்ளனர். இலகுவான பணி டூட்டி வேண்டுமென்றால் அதற்கு ஒரு தொகையும், கடினமான பணி டூட்டி வேண்டுமெனில் அதற்கு ஒரு தொகையும் கொடுத்தால் அவர்கள் விரும்பும் தடத்தில் பணி கிடைக்கிறதாம். மேலும் அந்த தடத்தில் பணியாற்றி வருகின்றவர்களையும் அதில் இருந்து வெளியேற்றி விடுகிறார்களாம். இதற்கும் ஒரு ‘லாபி’ அங்கு உள்ளதாம். இதனை உரியவர்களிடம் முறையிட்டும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லையாம். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று ஒரு சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பட்டா பிரச்னை என்னவாம்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்டத்தில் பட்டா பிரச்னை உச்சத்தில் இருக்குதாம். கலெக்டர், ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி என உயர் அதிகாரிகள் மாறி போயிட்டாங்க. தாசில்தார்களும் கூண்டோடு இடம் மாறிட்டாங்க. ஆனால் பட்டா பிரச்னை ரொம்ப காலமா தீரல. ஏற்கனவே மாவட்ட அளவில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாக்களை வேறு நபர்களுக்கு மாத்தி கொடுத்திட்டாங்களாம். 10 வருஷமா வீடு கட்டல, உங்களுக்கு எதுக்கு அரசு இலவச மனை பட்டான்னு வேறு ஆளுக்கு பட்டா செய்து தந்துட்டாங்களாம். ஏற்கனவே வாங்கிய சிலர் பாதி கட்டியிருக்காங்களாம். சிலர் தங்களது வாரிசுக்கு தான் செட்டில்மெண்ட் எழுதி வெச்சிருக்காங்களாம்.
இப்போ பல ஊர்களில் இருந்து எங்க இடத்தை காணோம், என் பட்டா இடத்தில் வேறு ஆளுங்க வீடு கட்டறாங்கன்னு புகார் குவிஞ்சிட்டு இருக்காம். கோவையில இப்படி ஏழை ஜனங்களை கொந்தளிக்க வெச்சிட்டதா உயர் அதிகாரிகளுக்கு தகவல் போயிருக்கு. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார்கள், தாசில்தார்கள் அளவில் என்ன தப்பு நடந்திருக்குன்னு லிஸ்ட் போட்டுக்கிட்டு இருக்காங்க. தப்பு செஞ்சவங்க மேல அதிகாரிங்க நடவடிக்கை எடுப்பாங்களா, பட்டா விவகாரத்திற்கு தீர்வு கிடைக்குமான்னு ஏழை மக்கள் எதிர்பார்த்துட்டு இருக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பத்திரப்பதிவுகளில் வசூல் கொடி கட்டி பறக்கிறதா சேதி வருதே..’’
‘‘அருவி மாவட்டத்துல ஆறுமுகனின் பெயரை கொண்ட ஊரின் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுகளில் வசூல் கொடி கட்டி பறக்கிறதாம். ஆறு வருஷமா அங்க பதிவாளர் சீட்ல அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டிருக்கிற ராஜாவின் பெயர் கொண்ட அதிகாரி, நான் வச்சதுதான் சட்டம்னு சொல்லிக்கிட்டு பணத்தையும், மனைையும் வாங்கி குவிக்காராம். பத்திரப்பதிவுன்னு ேபாய்ட்டாலே, கையில காசு, பையில பத்திரம்னு நம்பிக்கையோடு வாங்கிட்டு போங்கன்னு ஊழியர்களும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களாம்.
புஞ்ச நிலத்த நஞ்ச நிலமுன்னும், விளைநிலத்த தரிசு நிலம்னும், புறம்போக்கு நிலத்த தனியார் நிலம்னும் பல பத்திரங்கள் பதிவாகி வருதாம். இதனால் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு செல்கிற சாமானிய மக்கள், எவ்வளவு பணத்த அங்க கொண்டு போய் கொட்டறதுன்னு புலம்பிகிட்டு போறாங்க. உள்ளூர்ல முதலீடு குவிச்சா தெரிஞ்சிரும்னு, அந்த அதிகாரி குடும்பத்தார் பேருல சென்னையில பிளாட் வாங்கி குவிக்கிறாராம். மேலதிகாரிகளுக்கும் முறையா கப்பம் கட்றதால, அவர யாரும் இங்கிருந்து அசைக்க முடியாதுன்னு புரோக்கர் டீமும் புகழாரம் சூட்டுதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைகட்சியின் திண்ணை பிரசாரம் ஓய்ந்து போய்விட்டதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர் மட்டுமல்லாது தென்மாவட்டத்தின் பலதரப்பட்ட ஊர்களிலும் இலைக்கட்சியின் தலைவி பேரவையினர் பொறுப்பில் வாரத்தில் ஒருநாள் நடத்தப்படும் திண்ணை பிரசாரம் அடுத்தடுத்த வாரங்களிலேயே ஓய்ந்திருக்கிறதாம். மாநில பொறுப்பாளரான மாஜி உதயமானவர், கோட்டைக்காரரை விமர்சித்தது துவங்கி பலதரப்பட்ட பிரச்னைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளும் விதத்தில் இந்த பிரசாரத்தை கையிலெடுத்து பெயர் வாங்கலாம் என்றிருந்த நிலையில், பல்வேறு இடங்களிலும் இலைக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பின்மையால் பிரசாரம் ஊத்திக் கொண்டு வருகிறது. உதாரணமாக தூங்கா நகரில் தலைவி பேரவை நிர்வாகத்தில் முருகரானவர் இருக்கிறார்.
கட்சி நிர்வாகியான மாஜி தெர்மாகோல்காரருக்கும், முருகரானவருக்கும் லடாய் காரணமாக, துவக்க நாளன்று தலையைக் காட்டிய மாஜி தெர்மாகோல்காரர் அடுத்து எந்த திண்ணைக்கும் எட்டிப்பார்க்கவே இல்லை. இதேபோல்தான் தென்மாவட்டத்தின் பல ஊர்களிலும் கட்சி நிர்வாகிகள் பலரும், சேலத்துக்காரரே இந்த பிரசார அறிவிப்பை வெளியிட்டிருந்த போதும், தலைவி பேரவையினர் முன்னின்று நடத்துவதால், தங்களுக்கு பெயரில்லாமல் போகும் என இப்பிரசாரத்திற்கு ஒத்துழைக்காமல் போய் மொத்தமும் ஊத்திக் கொண்டிருப்பதை, இலைக்கட்சிக் காரர்களே பலரது காதுபட பேசிக் கொள்கிறார்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
The post பதவி கிடைக்காதவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்பதால் தாமரை கட்சி தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.