திருவள்ளூர்: 1959ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப்படைக் காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின்போது 213 பேர் உயிர் நீத்தனர். இதனால் அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி ஆண்டுதோறும் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு நேற்று மாவட்ட போலீஸ் எஸ்பி ரா.சீனிவாச பெருமாள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும் கூடுதல் போலீஸ் எஸ்பி ஹரிக்குமார், டிஎஸ்பிக்கள் லோகநாதன், கந்தன், தமிழரசி, சாந்திசேகர், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் காவலர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச்சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் கலந்து கொண்டனர்.
The post பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி மரியாதை appeared first on Dinakaran.