மகசூல் அதிகரிப்பு: விலை வீழ்ச்சி 12 டன் சம்பங்கி மலர்கள் குப்பையில் கொட்டி அழிப்பு

6 hours ago 2

*சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர்

சத்தியமங்கலம் : மழையின் காரணமாக மகசூல் அதிகரிக்கவே, விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் 12 டன் சம்பங்கி மலர்களை விவசாயிகள் குப்பையில் கொட்டி அழித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் சம்பங்கி மலர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இது தவிர வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைகளுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. கோடை காலத்தில் வழக்கமாக 20 முதல் 25 டன் வரை பூக்கள் விளைச்சல் இருக்கும் நிலையில், தற்போது சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கோடைகாலத்தில் மழை பெய்ததால் விளைச்சல் இருமடங்காக அதிகரித்து நேற்று சுமார் 50 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் நேற்றுமுன்தினம் ஒரு கிலோ சம்பங்கி ரூ.20க்கு விற்பனையான நிலையில், விலை வீழ்ச்சி அடைந்து நேற்று 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது.

இதில் கடைகள் மற்றும் வாசனையை திரவிய ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,மீதமுள்ள 12 டன் பூக்கள் விற்பனை ஆகாததால் பூ மூட்டைகளை மினி லாரியில் ஏற்றிச் சென்ற விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சத்தியமங்கலம் பெரியகுளம் பகுதியில் உள்ள குளக்கரையில் கீழே கொட்டி அழித்தனர்.

மகசூல் அதிகரிப்பால் சம்பங்கி பூ விலை வீழ்ச்சி அடைந்ததோடு விற்பனையாகாததால், பூக்களை கீழே கொட்டியதால் சம்பங்கி பயிரிட்ட விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்பங்கி பூ வியாபாரிகளான மகேந்திரன், கணேசமூர்த்தி, பாபு ஆகியோர் கூறியதாவது.

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் விளையும் சம்பங்கி பூக்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.

மழை காரணமாக விளைச்சல் அதிகரித்ததால் விற்பனைக்கு அனுப்பியது போக மீதமுள்ள பூக்களை விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.10 க்கு கொள்முதல் செய்த பூக்களை கீழே கொட்டி அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் விவசாயிகளுக்கு பூ பறிக்கும் கூலிக்கு கூட வருமானம் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post மகசூல் அதிகரிப்பு: விலை வீழ்ச்சி 12 டன் சம்பங்கி மலர்கள் குப்பையில் கொட்டி அழிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article