வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள்

5 hours ago 2

*கலெக்டர் வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

அதில் டிஆர்ஓ ராம்பிரதீபன், ஆர்டிஓ ராஜ்குமார் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். குறைதீர்வு கூட்டத்தில், சுய தொழில் கடனுதவி முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சாலை வசதி, அரசு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 458 பேர் மனு அளித்தனர்.

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். குறைதீர்வு கூட்டத்தில் பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும், உரிய பதில் அளிக்க வேண்டும், நிராகரிக்கப்படும் மனுக்களான காரணங்களை தெரிவிப்பது அவசியம் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், கடந்த வாரங்களில் நடந்த குறைதீர்வு கூட்டங்களில், உதவி உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்த 14 நபர்களுக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ₹12.11 லட்சத்தில் நவீன செயற்கை கால்களை, கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் செந்தில்குமாரி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் சூர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும், மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறும். வழக்கம் போல கலெக்டர் அலுவலகத்தில் தடையின்றி வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

படிப்படியாக வீடுகள் வழங்கப்படும்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைதீர்வு கூட்டத்தில் பெரும்பாலான மனுக்கள் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கேட்டு மனு அளித்தனர். இது தொடர்பாக, நடப்பு நிதி ஆண்டுக்கு ஏற்கனவே பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வீடுகட்ட ஆணை வழங்கியிருப்பதாகவும், தகுதியின் அடிப்படையில் குடிசை வீடாக உள்ள அனைவருக்கும் இத்திட்டத்தில் படிப்படியாக வீடுகள் வழங்கப்படும் என கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

The post வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள் appeared first on Dinakaran.

Read Entire Article