சென்னை: பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள், கடந்த 14 ஆண்டுகளாக ரூ. 12,500 தொகுப்பூதியத்துக்கு பணியாற்றி வருகிறார்கள். பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக அளித்திருந்தது. அதன்படி, பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் இந்த பட்ஜெட்டையொட்டி கோரிக்கை மனுக்களை தினமும் அனுப்பி வருகின்றனர்.