
காசா,
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான மோதல் போக்கானது பல வருடங்களாக நீடித்து வருகிறது. இந்த சூழலில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்தினர்.
இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர். இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது.
ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். காசா சுகாதார அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.
இந்த சூழலில், அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் அனைவரும் வருகிற சனிக்கிழமை மதியத்திற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்படி அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விடுவேன் என கூறினார்.
காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்று கொள்ள வேண்டும். அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் அவர் மிரட்டலாக கூறினார்.
அவருடைய இந்த பேச்சுக்கு ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது. டிரம்பின் எச்சரிக்கைக்கு அந்த அமைப்பின் மூத்த செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி அளித்துள்ள பதிலில், மிரட்டல் விடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறியுள்ளார்.
டிரம்பின் பேச்சுகள், போர் முடிவுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை கடினம் ஆக்குவது மட்டுமே செய்துள்ளது. இந்த விவகாரத்தில், மிரட்டலுக்கான மொழியில் அர்த்தம் இல்லை. அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து ஜூரி கூறும்போது, போர் நிறுத்த ஒப்பந்தம் என ஒன்று உள்ளது. அதற்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும். இதுவே, கைதிகளை திரும்ப பெறுவதற்கான ஒரே வழியாகும் என்று டிரம்புக்கு நினைவூட்டினார்.