சென்னை: விழுப்புரம் தவெக-வில் பதவிக்கு பணம் கேட்டு மாவட்ட செயலாளர்கள் நிர்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் 95 சதவீத மாவட்ட செயலாளர் பதவிகள் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்ததாக மாநகர், நகர், ஒன்றிய அளவிலான பதவிகள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த நிலையில் பல மாவட்டங்களில் நகரச் செயலாளர் பதவிக்கு 10 லட்சம், ஒன்றிய செயலாளர் பதவிக்கு ஒரு லட்சம் என பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வகையில் விழுப்புரம் தவெக-வில் பதவிக்கு பணம் கேட்டு மாவட்ட செயலாளர்கள் நிர்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் மாட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது; விழுப்புரம் தமிழக வெற்றி கழகத்தில் பதவிக்கு பணம் கேட்டு மா.செ.நிர்பந்தம் செய்வதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர். நகர மற்றும் மாவட்ட பதவி வழங்க விழுப்புரம் தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் குஷி மோகன் 3 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பணம் கேட்பதாகத் தெரிவித்தனர்.
மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், கட்சிக்குச் சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது. மாற்று கட்சியில் இருந்து ஒரு வாரம் முன்பு வந்த முபாரக் என்பவருக்கு நகர செயலாளர் பதவி வழங்கியதாகவும் புகார் கூறியுள்ளனர். மாநில பொதுச்செயலாளர் ஆனந்துக்குத் தெரிந்தே பணம் வசூல் நடைபெறுவதாகக் கூறிய அவர்கள், தலைவர் விஜய்க்குத் தெரிவிக்கவிடாமல் ஆனந்த் தடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டினர். ரூ.4 லட்சம் பணம் கேட்டு கொடுக்காததால், தனக்கு பதவி கொடுக்கவில்லை எனவும் பதவிக்கு பணம் கேட்டு நிர்பந்திப்பதால் அதிருப்தியில் இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
த.வெ.க.தலைவர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிருப்தி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், செய்தியாளர் சந்திப்பின்போது தவெக பொறுப்புக்காகப் பணம் கட்டிய காசோலையை நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர்.
The post பணம் கொடுக்காததால் பதவி மறுப்பு?.. TVK-வில் நீடிக்கும் அதிருப்தி appeared first on Dinakaran.