சென்னை: “பட்டியல், பழங்குடியினர் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஆண்டை விட இந்தாண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 விழுக்காடு குறைந்துள்ளது. வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 2021-ல் 445-லிருந்து 2024-ல் 368 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது 19 விழுக்காடு குறைவாகும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 29) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.